Appeal from a supporter!

The very act of capital punishment especially to those penitents and well within the purview of rehabilitation serves no purpose in maintaining the sanctity of humanity. Every member of the Human society unless proved as a threat to the society at large and ascribable as a clear enemy of Humanity has the Right to life and the Right to face a dignified death.

I am almost certain that the Honourable President has accounted these and given her due conscience and examined possibilities within the legal ambit while considering the Mercy petition of those facing imminent death penalty.

Myself as a partner in the broader interest of a progressive society and in the interest of showcasing our Nation as a hallmark of Human rights internationally, urge my appeal and present a plea to the Honourable President to review the Mercy petition and reconsider it with equity and good conscience as an extraordinary case that can stand as a testimony for amnesty.

I also kindly request our Honourable Chief Minister Dr Jayalalitha Jayaram to give her due assiduity in this case and by exercising any such powers the state may have to help suspend commuting this death sentence and stop capital punishments especially to those who have expressed repentance and shown scope of being rehabilitated.

Sincerely,
Ahamarshan Jayaraman Nagarajan
D.Phil Scholar
University of Oxford
Oxford
United Kingdom

பேரறிவாளன், சாந்தன், முருகன் நேர்காணல் – ஜூனியர் விகடன்

28.08.2011 ஜூனியர் விகடன் இதழில் வெளியான பேரறிவாளனின்; முருகன், சாந்தனின் நேர்காணல்.

ஈழப் படுகொலைகள் உண்டாக்கிய துயரமே தமிழக மனங்களில் ரணமாக வடியும் நிலையில், தூக்குக் கயிறு வடிவில் மீண்டும் துரத்தத் தொடங்கி இருக்கிறது துயரம். ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரும் மரணத்தின் நிழலில் நிற்கிறார்கள். தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைத் தளர்த்தக்கோரி இவர்கள் அனுப்பிய கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. மூவரையும் காப்பாற்றக் கோரி கட்சி வேறுபாடுகளைக் கடந்து தமிழகம் முழுக்க உணர்வும் உருக்கமுமான போராட்டங்கள் நடக்கின்றன. மரணத்தின் துரத்தலில் வாடும் அந்த மூவரின் மனப் போராட்டங்களையும் அறிய முடிவெடுத்தோம். வழக்கறிஞர்கள் ராஜீவ் காந்தி, பாலாஜி மூலமாக கேள்விகளை அனுப்பி வைத்தோம். அதன் தொகுப்பு இங்கே…

முதலில் பேரறிவாளன்…

”எந்த நேரத்திலும் தூக்கு அறிவிப்பு வரலாம் என்கிற நிலையை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?”

”முதலில் எங்களுக்காகப் போராடும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம். தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே மரணத்தின் நிழலில்தான் நிற்கிறோம். கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதில் மரண நிழல் எங்களைப் பெரிதாகசூழ்ந்திருக்கிறது. மக்களின் ஒருமித்த கைகோப்பு எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் வெளிச்சத்தையும் உருவாக்கி இருக்கிறது. 19 வயதில் உள்ளே வந்தவன். 21 வருடங்கள் இந்தச் சிறையிலேயே பெருவலியோடு கழிகிறது. தூக்கு அறிவிப்பை இந்த வலியில் இருந்து விடுபடும் நாளாக எண்ணி என்னைத் தேற்றிக்கொள்ளும் நிலையில்தான் இருக்கிறேன்!”

”தமிழக மக்களிடம் நீங்கள் சொல்ல நினைக்கும் கருத்து?”

”அரசியல் பாகுபாடு பார்க்காமல் அனைவரும் எங்களுக்காகப் போராடுவது எங்களின் கண்ணீரைத் துடைத்து இருக்கிறது. இன உணர்வு மட்டும் அல்லாது, மனிதநேயமும் ஒருசேர்ந்த போராட்டம் எங்களை சிலிர்க்க வைத்திருக்கிறது. பொதுமக்களும் அனைத்துத் தலைவர்களும் ஒரே அணியில் நின்று தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராட வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். அனைத்து அரசியல் தலைவர்களும் ஒருமித்த உணர்வோடு திரண்டு தமிழக முதல் அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தால், நிச்சயம் அவர் எங்களின் விடிவுக்கு வழி செய்வார். அவருடைய குரல் எங்களுக்காக காத்திருக்கும் கயிறை நிச்சயம் அறுத்தெரியும்!”

”தமிழக முதல்வரிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?”

”மிகுந்த அறிவும் ஆய்ந்தறியும் பேராற்றலும் கொண்டவர் நீங்கள். இந்த வழக்கில் இருக்கும் குளறுபடிகளை நிச்சயம் அறிந்திருப்பீர்கள். அம்மா, மரணம் கோரப்பசியோடு துரத்தும் இந்த நேரத்தில் மட்டும் அல்ல… 20.07.07 அன்றே  உங்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். ‘வழக்கில் சிக்குபவர்களுக்கு வசதி இல்லை என்றால், அவர்களின் தரப்பு நியாயம் அம்பலம் ஏறாமல் போய்விடும். அத்தகைய குறைபாடு கொண்ட கட்டமைப்புதான் இன்றைக்கு நிலவுகிறது. என்ன தவறு செய்தோம் என்றே தெரியாமல் இத்தனை நாள் மரணத்தின் மடியில் படுத்துக் கிடப்பவனாகக் கேட்கிறேன்… தயவுசெய்து தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுங்கள்!’ என அந்தக் கடிதத்தில் உங்களிடம் கோரிக்கை வைத்திருந்தேன். பிறருக்கு முன்னுதாரணமான சட்டத் திருத்தங்களைக் கொண்டுவருகிற சக்தி உங்களுக்கு மட்டுமே இருக்கிறது.மனசாட்சியின் கண்ணீர்க்குரலாகச் சொல்கிறேன்… எங்களுக்குத் தெரிந்து எதுவும் நடக்கவில்லை. சித்திரிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக இத்தனை வருடங்கள் வாடும் எங்களுக்காக உங்களின் ஒற்றைக் குரல் ஒலித்தால் போதும் அம்மா!”

”கருணை மனு நிராகரிக்கப்பட்ட உடன் மரணம் நெருங்கிவிட்டதாக நினைக்கிறீர்களா?”

”99-ம் ஆண்டு மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிஃபேன் என்னைப் பார்க்க வந்தார். ‘வெளியே வந்தால் என்ன செய்வீர்கள்?’ எனக் கேட்டார். ‘தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராடுவேன்’ எனச் சொன்னேன். காரணம், தூக்கு அறிவிக்கப்பட்ட ஒருவனின் ஒவ்வொரு நிமிஷமும் எத்தகையக் கொடூரமானது  என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தவன் நான். வெளி உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க இப்போது ஆசையாக இருக்கிறது. சிறு குழந்தையின் தவிப்பாக மனது ஏங்குகிறது. எங்களுக்காகப் போராடும் மக்களை நேரில் பார்த்து கைகூப்பத் தோன்றுகிறது. ஆனால், ஏற்கெனவே பரப்பிய பழிகள் போதாது என ‘சாத்தானின் படைகள்’ என்கிற புத்தகத்தை நான் அச்சடித்ததாக சிலர் இப்போது கிளப்பிவிடுகிறார்கள். அந்தப் புத்தகத்தை யார் உருவாக்கியது என்பது சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும் என்னை இட்டுக்கட்டுவது ஏன்? ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கில் ஒருவேளை மரணம் எங்களை வென்றுவிட்டால், கயிற்றின் முன்னால் நின்று நான் சொல்ல நினைப்பது… தூக்குக்குப் பலியாகும் கடைசி ஆள் நானாக இருக்கட்டும் என்பதுதான்!”

அடுத்து முருகன்…

”தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் உங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறதா?”

”மரணத்தைவிட மரணத்தின் நாளுக்காகக் காத்திருப்பது கொடுமையானது. அதை ஒவ்வொரு கணமும் அனுபவிக்கும் இந்த சூழலில், மக்களின் ஆதரவுதான் எங்களை நம்பிக்கையோடு நிமிர வைக்கிறது! தனித்தனியான போராட்டங்களை முன்னெடுக்காமல், எங்களுக்காக எல்லோரும் ஒருமித்து நிற்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. இதர மாநிலங்களில் தண்ணீர் பிரச்னைக்குகூட அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகத் திரளுகின்றன. எங்களின் கண்ணீர் பிரச்னைக்கும் அதேபோல் அனைத்துக் கட்சிகளும் திரண்டு, முதல்வரிடம் கோரிக்கை வைக்க வேண்டும். மூன்று உயிர்களுக்காக மொத்த தமிழகமும் கைகோத்து நின்றதை காலக் கல்வெட்டு தமிழனின் உயர்ந்த உணர்வாகப் பதிவு செய்ய வேண்டும்!”

”தமிழக மக்களிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?”

”எங்கள் மீதான குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மை இல்லை. மரணத்துக்குப் பயந்து இந்த வார்த்தைகளைச் சொல்லவில்லை. எங்களின் கவனத்துக்குத் தெரியாமல் நடந்த சம்பவத்துக்கு இத்தனை வருட சிறைவாசமே பெரிய கொடுமை. ஒப்புதல் வாக்குமூலத்தில் நாங்களே பல விஷயங்களை ஒப்புக்கொண்டதாக விசாரணை அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், ஒப்புதல் வாக்குமூலத்தை அவர்களே தயாரித்து எங்களை அதில் கையெழுத்துப் போடச் சொன்னார்கள். அதற்காக அவர்கள் செய்த சித்ரவதைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மரணக் கொட்டடியின் நெருக்கடிகள் எங்களுக்குப் பழகிப்போனாலும், என்றைக்காவது ஒருநாள் வெளியே வருவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. உறவுகளின் உணர்வுகளால் அந்த நம்பிக்கைப் பலப்படுகிறது. ஒரே வார்த்தையில் எங்களின் உணர்வைச் சொல்வதானால்…. நன்றி!”

அடுத்து ம.தி.சாந்தன்…

”ராஜீவ் கொலை விசாரணையில் நிறைய குளறுபடிகள் நடந்ததாகச் சொல்கிறார்களே…?”

”கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத நாங்கள் குற்றவாளிகளாக நிற்கிறோம். இந்த வேதனையைக் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால்தான் புரியும்.

கொழும்பு வழியாக வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்வது பாதுகாப்பானது அல்ல என்பதாலேயே நான் இந்தியாவுக்கு வந்தேன்.  இலங்கை அரசு தந்த உண்மையான பாஸ்போர்ட்டுடன் வந்தேன். அதை சி.பி.ஐ. கைப்பற்றி உள்ளது. ராஜீவ் போன்ற பெரிய தலைவரைக் கொல்ல வருபவன் தன்னைப் பற்றிய தகவலைச் சொல்லும் உண்மையான பாஸ்போர்ட்டுடன் வருவானா?

நான் சுமக்கும் மரண தண்டனைக்குப் பெயர் குழப்பமும் ஒரு காரணம். இந்த வழக்கில் கைதாகி விடுதலையான இரும்பொறை என்பவரை நான் ராஜீவ் இறப்பதற்கு முன்னர் சந்தித்ததாகவும், 15 ஆயிரம் பணம் கொடுத்ததாகவும், ‘முக்கியமான ஒரு நபரைக் கொல்லப் போகிறோம்’ என்று சொன்னதாகவும் மரண தண்டனையை உறுதி செய்தபோது மாண்புமிகு நீதிபதி கே.டி.தாமஸ் அவர்கள் கூறுகிறார்.  ஆனால், மாண்புமிகு நீதிபதி வாத்வா அவர்கள் அது இறந்துபோன எதிரி திருச்சி சாந்தன் என்கிறார். இன்னொருவர் சொன்னதை நான் சொன்னதாகச் சொல்லி என்னைத் தூக்கில் நிறுத்தப் போகிறார்கள்.

‘நானும் சிவராசனும் நளினியை மிரட்டி இந்தசதிக்கு உடன்பட வைத்தோம்’ என்று நீதிபதி தாமஸ் சொல்கிறார்.  ஆனால், நீதிபதி வாத்வா, ‘ராஜீவ் இறந்த அடுத்த நாள்தான்  நளினியை சாந்தன் அறிவார்’  என்கிறார்.

நான் புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவில் முக்கியமான ஆள் என்பதற்கு ஆதாரம் இருப்பதாக நீதிபதி தாமஸ் தீர்ப்பில் சொல்கிறார். இவை எதற்கும் ஆதாரம் இல்லை. விடுதலையான இரும்பொறையுடன் நான் சம்பந்தப்பட்டிருந்தேன் என்றோ, நளினியை மிரட்டினேன் என்றோ சி.பி.ஐ.கூடச் சொல்லவில்லை. ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை அவரிடம் கூறி அவரது பதிலை விசாரணை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும். ஆனால் என் விஷயத்தில் இது செய்யப்படவில்லையே.. எப்படி?

சிவராசனின் பணத்தை முதலில் காந்தன் என்பவர் கையாண்டார். அவரிடம் இருந்து நான் அந்தப் பொறுப்பினை எடுத்துக்கொண்டதாக நீதிபதி வாத்வா அவர்கள்  தீர்ப்பில் கூறுகிறார். சிவராசனின் பணத்தை நான் பாதுகாத்து கொடுத்ததாகவோ கையாண்டதாகவோ விசாரணை நீதிமன்றம் என்னிடம் கேட்டுப் பதிவு செய்யவில்லை.  இப்படி எல்லாம் குளறுபடிகள் நடந்தன. குளறுபடிகளே எங்களுக்கான முடிவுப் படிகளாக மாறிவிட்டன!”

”கருணை மனு நிராகரிக்கப்பட்டது தெரிந்த உடன் என்ன நினைத்தீர்கள்?”

”என் தந்தை ஆறுமுகம் தில்லையம்பலம் அவர்களின் நினைவு வந்தது. அவருக்கு இப்போது 70 வயது. இறுதிக்கட்டப் போருக்குப் பிறகு அவரிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. அதற்கு முன்னர் அங்கு விவசாயம் செய்துகொண்டு இருந்தார். அவர் எப்படி இருக்கிறார் என்கிற கவலை என்னைப் பெரிதாக வருத்துகிறது. பெற்ற தகப்பன் இருக்கிறாரா இல்லையா என்பதை நினைத்து அழுவதா? நான் இருப்பேனா மாட்டேனா என்பதை நினைத்து அழுவதா? இந்த அப்பனும் மகனும் விதியெனும் கையில் சிக்கிய விளையாட்டுப் பொம்மைகளாய் அல்லாடுகிறோம்!”

– இரா.சரவணன்
நன்றி: ஜூனியர் விகடன்

மரண தண்டனையை நிறுத்த குவைத்தில் கையெழுத்து இயக்கம்

குவைத்தில் அனைத்துத் தமிழ்ச் சங்கங்களின் பங்களிப்புடன், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை இரத்து செய்து விடுதலை செய்யக்கோரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இராசீவ்காந்தி கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்கள் அண்மையில் இந்திய சனாதிபதியால் நிராகரிக்கப்பட்ட அறிவிப்பு அனைத்து தமிழர்களின் மத்தியிலும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து உலகெங்கும் மரணதண்டனைக்கு எதிரான குரல்களும், மரண தண்டனையை இரத்து செய்யக்கோரும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு வருவதோடு, இக்கருத்தினை வலியுறுத்தி இந்திய அரசிற்கு மனுக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் குவைத் நாட்டில் வாழுகிற தமிழர்கள் ஒன்றிணைந்து, அனைத்துத் தமிழ் அமைப்புக்களின் பங்களிப்புடன், இந்திய சனாதிபதி, துணை சனாதிபதி, பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உள்துறை அமைச்சர், மனித உரிமை மன்ற நீதிபதி, தமிழக ஆளுனர், தமிழக முதலமைச்சர் ஆகியோருக்கு மனு அனுப்ப ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இம்மனுவில் குவைத்தில் வாழுகிற அனைவரிடமும் கையெழுத்து பெற்று அனுப்ப கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக தகவல்களை, thamizhnadan@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவோ, 66852906 என்ற கைபேசி எண்ணிலோ தமிழ்நாடன் அவர்களைத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

குவைத்வாழ் தமிழர்கள் அனைவரும் தமிழ்நாடனிடம் கையெழுத்துப் படிவத்தினைப் பெற்று கையெழுத்துக்களை சேகரித்து இந்த முயற்சிக்கு வலுசேர்க்க வேண்டுகிறோம்.